Tuesday, February 8, 2011

விவேகானந்தர் சொன்னவை!

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.
இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.
வீரர்களாகத் திகழுங்கள்!
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.


* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!

*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.


*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.

*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.

*ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.


*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).

*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.


*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.

*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.

*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.


*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.


* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

*தியானம்
எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம்
ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு
எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.

Wednesday, January 26, 2011

பாரதியின் செந்தமிழ்

செந்தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு (செந்தமிழ்)

தமிழ்த்தாய்
ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிட மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம்
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர்
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்!

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

தமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.

பாரதி பாட்டு

தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
*
கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி
எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்
மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி;
தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செய்யமணித் தாமரை நேர் முகத்தாள் காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்.
*

தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாகப்
போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமகா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித் தமரத் தன்மை ஈவாள்.
*

மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி.
பாகார்ந்த தேமொழியாள்,படருஞ் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி
ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை.
சோகா டவிக்குளெனைப் புகவொட்டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள்.
*

மரணத்தை வெல்லும் வழி

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார்.
*

பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்,பொதிகை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனென் றில்லை;
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
*

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.
*

அசுரர்களின் பெயர்

அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;
மிச்சத்தைப் பின் சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்,மேதினியில் மரணமில்லை;
துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.
*

சினத்தின் கேடு

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்;சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.
*

மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே.
*

தேம்பாமை

''வடகோடிங் குயர்ந்தென்னே,சாய்ந்தா லென்னே,
வான் பிறைக்குத் தென்கோடு''பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!
*

பொறுமையின் பெருமை

திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண் டீர்,பகுதி'தணி'யெ னுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்!
*

பொறுமையினை,அறக்கடவுள் புதல்வ னென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்.
இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையாரோடே;
பொறுமை யின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான்
*

ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய் மரணமெய்தல் கொடுமை யன்றொ?
தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்;
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
''நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்''என்றான்.
*

கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்!
கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம்
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதர்கு வழியெனநான் குறித்திட்டேனே.
*

கடவுள் எங்கே இருக்கிறார்?

''சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று ஹைரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ?
*

சுயசரிதை

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
''கீழான்''பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.
*

சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றொ நிகழ்த்து வீரே?
*

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் ரில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!
*

குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்)

ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்;
தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்.
வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி!
*

எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்!
முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்,
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்!
*

தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே.
*

வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை;
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்;
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக்
மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.
*

குரு தரிசனம்

அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்,
முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.
*

அப்போது நான்குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியது பேச லுர்றேன்:
''அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே!எனக்குநினை உணர்த்து வாயே.
*

யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே?
யாதுணர்வாய் கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,அனக்குணர்த்த வேண்டும்''என்றேன்.
*

பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த் தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்;
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வாவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.
*

உபதேசம்

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரம யோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, [என்றேன்
''அறிதிகொலோ!''எனக்கேட்டான்''அறிந்தேன்''
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.
*

தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
''வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்஧ள்
தெரிவதுபோல் உனக்குள்஧ள் சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்''என்றான்.
*

கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி
மையிலகு விழியாளின் காத லொன்றே
வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி,
ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம்,
அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்.
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.
*

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
''தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ?
மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்''அன்றென்.
*

புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;
''புறததேநான் சுமக்கின்றேன்;அகத்தி னுள்ளே;
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும்.
*

சென்றதினி மீளாது;மூடரே,நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.
*

மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.
*

சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.
*

குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்.
*

கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!
*

கோவிந்த சுவாமி புகழ்

மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்;
வண்மை திகழ் கோவிந்த ஞானி,பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்;
எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!
தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்
செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன்.
*

அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்,
அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்;
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்;
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதியுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;
*

பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
போந்தானிம் முனியொருநாள்;இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்;பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்;
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
மரணபயம் நீங்கினேன்;வலிமை பெற்றேன்.
*

யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்

கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்
கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.
*

தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு
சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி.
*

குவளைக் கண்ணன் புகழ்

யாழ்ப்பாணத் தையனையென் நிடங்கொ ணர்ந்தான்
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்,
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்.
தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான்,
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்.
*

மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்;
மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரப்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்.
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச்
சமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
''அன்றேயப் போதேவீ டதுவே வீடு''
*

பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோ ம்,
பாரினிலே பயந்தெளிந்தோம்;பாச மற்றோம்.
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம்,அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்;
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர்.
*

பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய பெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.
*

தாய் மாண்பு

பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
''கண்டார்க்கு நகைப்'பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்பமன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ?உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை ''அன்னையும் பிதாவும்,''
பாரிடை ''முன் னறிதெய்வம்''என்றா: அன்றோ?
*

தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ ?
தாய்பெண்ணே யல்லளோ?தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைத் படுத்த லாமோ?
''தாயைப்போ லேபிள்ளை''என்று முன்னோர்
வாக்குளதன் றோ?பெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ?
*

வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;
நாட்டினிலே
நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்,அப்பா!
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;
பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே.
*

காதலின் புகழ்

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்;
காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்.
*

ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்;வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.
*

கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;
மங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ?
*

நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே.
*

காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ?
*

விடுதலைக் காதல்

காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்;
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்;
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே,
பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால்,
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.
*

வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்.
காரணந்தான் யாதெனிலோ;ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்;கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!
*

ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ?வீட்டைச் சுட்டால்,
நலமான் கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே!
*

சர்வ மத சமரசம்
(கோவிந்த சுவாமியுடன் உரையாடல்)


''மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன்
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே
நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்;
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்,
வெயிலுள்ள போதினிலே உலர்த்திக் கொள்வோம்.
*

காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்;
கனமான குருவையெதிர் கண்டபோதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்;
பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப்
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்''அன்றெனுள்ளே.
*

சிந்தித்து ''மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கே டேன் கூறாய்''என்றேன்.
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்;
''அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை;பந்தமில்லை;பந்தம் இல்லை;
பயமில்லை;பயமில்லை;பயமே இல்லை;
*

''அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்;
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்;நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை;ஆத லாலே,
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா!
*

'பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்
பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு.
*

''ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்!
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா!
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ?
பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்;
பாரினிலித் தருமம்நீ பகரு வாயே.
*

''ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி 'ஓம் நமச் சிவாய' வென்பர்;
'ஹரிஹரி'யென் றிடினும் அஃதே;'ராம ராம'
'சிவசிவ'வென்றிட்டாலும் அஃதேயாகும்.
தெரிவுறவே 'ஓம்சக்தி'யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.
*

''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்.
*

''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம்,
நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.
*

''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;
தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!''
*

எங்கோ தொலைத்தேன்

ஆரம்பப் பள்ளியில் என்னோடு கூடவே இருந்தான் பட்டன் அறுந்து போன சட்டையோடு ஒரு நண்பன்(வசந்த குமார்).

ஆசிரியர் மேஜையில் சாக்பீஸ் திருடினாலும், பக்கத்து தோட்டத்தில் கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்.

வீட்டுப் பாடங்களை எழுத மறந்து போன நாட்களில் எல்லாம், ஆசிரியர் வரக்கூடாதெனும் என் பிரார்த்தனையில் தவறாமல் அவனும் பங்கெடுப்பதுண்டு.

‘குளமாங்கா’ உடைத்துத் தின்றும், கடலை மிட்டாய் கடித்துச் சிரித்தும், புன்னை மரத்தடியில் புன்னக்காய் பொறுக்கிக் கோலி விளையாடியும்,
எங்கள் முதல் ஐந்தாண்டுக் கல்வி கரைந்தே போயிற்று. பிரியவே முடியாதென்றும் உடையவே கூடாதென்றும் நான் கங்கணம் கட்டிக் கொண்ட முதல் நண்பன் அவன்.

பின், அந்த மே மாத விடுமுறைக்குப் பின் நான் ஆறாம் வகுப்புக்கு சென்றபோது அவன் நினைவுகள் மட்டும் அவ்வப்போது வந்து சென்றன.

அவன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் சில கிலோமீட்டர் தான் தூரம். அப்போது. நாங்களோ வெவ்வேறு திசையில் வெகுதூரம் நடந்திருந்தோம்.

கடந்து விட்டது கால்நூற்றாண்டு இப்போது பார்த்தால், ‘மணி என்னாச்சு’ என்று கேட்டு நகரக் கூடும். பரிச்சயமில்லாத புது முகம் கண்டு

நீ பல நூற்றாண்டு வாழ்க என் நண்பா!

கவிதைகள் சிலதை எங்கோ படித்தேன்

**
கால நதிக்கரையில் கால் நனைத்தவாறு நீள நடக்கின்றேன்
கரையோரம் என் சுவடுகள் கிடக்கின்றன கவிதைகளாக
நாளாந்தமான புதிய விதிகளின் பிறப்பில்
என் கவிதைகளிலும் வேண்டியன நிலைத்தும், வேண்டாதன அழிந்தும்போக
எஞ்சியவற்றில் வாழ்வேன் நான்.

*
இன்னும் ஈரம் குலையாத வண்ணத்தூரிகையில் இருந்து சொட்டிக்கொண்டே இருக்கின்றன, வரையப்படாத என் ஓவியங்கள்.!
*
அறியப்படாத பின்னிரவுகளில் வெளிர் நீலமாய் கசியும் என் கனவுகளை மிரட்டி துரத்துகின்றன தெரு நாய்களின் ஓலங்கள்.!
*
நீ விசி எறிந்த எனக்கான பிரத்யோக பார்வையை உலர்ந்த சருகுகளிடயே சப்தமிடாமல் நான் தேடிய அந்த மஞ்சள் மாலைப் பொழுதில்., என்னைக் கடந்து எத்தனை பட்டாம்பூச்சிகள் பறந்து சென்றன என்பதற்கான கணக்கில் நினைவில் நின்றவை தவிர மறந்துப் போன சில உதிரிகளைக் குறித்து எனது பெரும் கவலை இருந்தது என்பது பற்றி நீ ஏதும் அறிவாயா..?
*

பிரிவிற்கான மொழி
------------------
மிக நெருங்கிய தருணத்தில் ஒரு வியர்வைத்துளியின் இடைவெளியில் மெல்ல விலகி விட்டோம் நாம்.

எதிரெதிர் திசைகளில் நகரும் ரயில் பெட்டிகளில் எது நகருகிறது....?

நிகழ்தகவுகளாய் வர்ணம் மாறிய மனதின் மெளனத்தை பேச முடியுமா உன்னால்...?

இயல்பு மீறிய ஒரு சலனத்திற்காக இருவருமே அமைதியாய் காத்திருக்கிறோம்.

பிரிவுகளின் உலர்ந்த காரணங்களுக்கான பிரத்யோக மொழிகளை சொல்வதற்கு உதடுகள் தங்களை ஈரப்படுத்திக்கொள்கின்றன.

ஏதாவது ஒரு உடைபடாத நொடியில் உடையலாம் நம் பிரிவிற்கான உறவு.

நீண்ட மெளனங்களின் கருத்த வராண்டாக்களில் தளர்ந்து நடக்கிறது.... நம்மை மீறி கொப்புளிக்க துடித்த நம் முதல் துளிர்த்தலுக்கான நினைவு....

நொடிகள் கடந்தாலும் நம்மை கடக்காமல் நிற்கிறது இந்த இமைக்காத பொழுது....
சில பெருமூச்செறிதல்களுக்கு பிறகு...
சின்னப் புன்னகையோடும்
மென்மை கைக் குலுக்கலோடும்
துவங்கிறது...
நம் பிரிவிற்கான மொழி.

தயக்கம்
********
நேற்றுவரை என்னிடம் தயக்கம் இல்லாமல்
யோசிக்காமல் பேசியவள் ...
இன்று ஒரு வார்த்தை பேசுவதற்கும்
யோசித்து யோசித்து ... தயங்கித் தயங்கி தான் பேசுகிறாள் ..
நான் சொன்ன ஒரு வார்த்தையால் ...
சொல்லாமலேயே இருந்திருக்கலாம்

"நான் உன்னை காதலிக்கிறேன்" என்று..

சொல்லின் சொல்:
-----------------
நம் உரையாடலில் ஒரு கண உமிழலில் பிறப்பெடுக்கப் போகும் எனது அடுத்த சொல் விசேடமானது....

நான் உதிர்க்கும் இறுதி சொல்லாக அது இருக்கலாம்... அல்லது நீங்கள் கேட்கும் கடைசிச் சொல்லாக கூட இது அமையலாம்....

ஏற்கனவே நான் காற்றில் விதைத்துப் போன சொற்களின் தொடர்வாய் இது நிகழலாம்...
ஒரு கண உமிழலில் காலங் காலமாய் கட்டி வைக்கப் பட்டிருந்த கோட்டைக் கொத்தளங்களை சரிக்கும் உளியாக கூட இது
இருக்க்கலாம்..

ஆதிக்கத்திற்கு எதிரான தோட்டாவாக அது வெடிக்கலாம்...
அல்லது
மெளனமாய் இறந்தவனின் கல்லறையில் ஒரு உதிரிப் பூவாகக் கூட அது கிடக்கலாம்....

ஆனால் அந்த சொல்லின் கரைசலின் மீதத்தில் நான் இருப்பேன் என்பதை இப்போதைக்கு உறுதியாய் சொல்ல முடியும்.

*
நேற்றைய என்னை இன்றைய நான் வெல்லத் துடிக்கிறேன்… நாளைய என்னிடம் இன்றைய நான் தோற்கப்போவது தெரிந்திருந்தும் !

தீப்பெட்டியென நிலையாய் உன் நினைவு. தீக்குச்சியாய் உரசி உரசி எரியும் மனது!
*

தினம் தினம் வந்து போகின்ற பேருந்து வரலாம் வராமல் போகலாம் வழித்தடமும் மாறலாம் ஆனால் நான் மட்டுமே வந்து வந்து போன சில நினைவுகள்.....!
மனம் விட்டு பேசிய சில வார்த்தைகள் வாய்விட்டு சிரித்த சில நேரங்கள் உதட்டளவு உறவினை உதறித் தள்ளிவிட்டு உள்ள்த்தளவில் உறவினை வளர்த்து உயிர் வாழ்வோமெனச் சொன்ன உன் நினைவுகளால்.
மறக்க முடியாத உறவுகளைச் சுமந்து ஊனமாய் போன உடம்புடன் நான் மட்டும்
நித்திரை இல்லாத நினைவுகளோடு இன்றும்.
*
**************
இப்போதெல்லாம்
நான் கண்மூடி
கனவுக்காய்க் காத்துக் கிடக்கிறேன்.

காரணம்
கனவிலாவது
என் காதலைச் சொல்லி விட.

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால்தானோ என்னவோ
என் வசந்தம்
இன்னமும் சாகாமல் இருக்கின்றன.

ஓ!...
என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு
உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்...
நான் உன்னைக் காதலிக்கிறேன்
இதுதான் உண்மை!
*******

வாழ்க்கையை பற்றி எங்கோ படித்தேன்!

இந்த இயற்கையின் மாபெரும் சக்தியிலிருந்து தான் நாம் உருவானோம்.
நம்மை யார் படைத்தால் என்ன?
இவ்வுலகில் பிறந்துவிட்டோம், வாழ்ந்துதான் ஆகவேண்டும்.
நம் பிறப்பிற்கென்று ஒரு நோக்கமும் இல்லை.
யாருக்கும் உன்னால் பிரச்சினைகள் ஏற்பட்டுவிட கூடாது
என்பதை வேண்டுமென்றால் உன் நோக்கமாக கொள்.
முடிந்தால் மற்றவருக்கு உதவுவதில் சந்தோசம் காண்.

வாழ்கை என்பது ஒரு போராட்டம்.
அதில் போராடினால் மட்டுமே சந்தோஷமாக இருக்க முடியும்.
இங்கு வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் மற்ற உயிர்களோடு போராடித்தான் உயிர்வாழ்கிறது.
மனிதனுக்கும் இதில் விதிவிலக்கில்லை.
போராட்டம் என்பது ஒரு கஷ்டம் அல்ல.
அது உன்னை நீ இவ்வுலகில் நிலை நிறுத்திக்கொள்ள உதவும் ஒரு கருவி.
இந்த உலகம் சந்தோஷமயமானது!
அதை முதலில் நீ உணரவேண்டும்!
ரோஜாவில் முட்கள் இருப்பதுபோல
வாழ்க்கையில் சில நேரங்களில் துன்பங்களும் வரும்.
அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

வாழ்கை ஒரு கதம்பம். அது சுக துக்கங்கள் நிறைந்தது.
நிரந்தரமான சோகமும் இல்லை
நிரந்தரமான சந்தோஷமும் இல்லை.
எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டம் உண்டு.
எல்லோருடைய வாழ்க்கையிலும் சந்தோஷமும் உண்டு.

எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதை முழுமனதுடன் அப்படியே ஏற்றுக்கொள்.
பிரச்சினைக்கான காரணங்களை ஆராய். பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
எந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு என்று நம்பு.
அந்த தீர்வு நமக்கு வேண்டும் என்றால் தெரியாமல் இருக்கலாம்.

சரியாக பார்க்க பழகிக்கொண்டால், எளிதில் தீர்வு கிடைக்கும்.

பார்க்க தெரிந்தால் பாதை தெரியும்
பாதை தெரிந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
---- கண்ணதாசன்



நீ செய்யும் தவறுகளுக்கு நீயே பொறுப்பு.
நீ செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு விளைவு உண்டு.
அதன் விளைவை நீ தான் சந்திக்கவேண்டும்.
நீ இந்த சமூகத்தில் எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்கிறாய்.
இவ்வுலகில் உனக்கு மட்டும் துன்பங்கள் வரவில்லை.
இங்கிருக்கும் ஒவ்வொருவரும் துன்பங்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இன்பமும் துன்பமும் நீ பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக சொல்லவேண்டுமானால், ஒரு திருமண விருந்தில் நீ பங்குகொள்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். உனக்கென்று ஒரு கண்ணாடி குவளையில் குளிர்பானம் வைக்கப்பட்டிருக்கிறது. அக்குவளையில் பாதி அளவு பானம் நிரம்பி இருக்கிறது. மேல் பாதி அளவில் வெற்றிடம் (காற்று) நிரம்பி இருக்கிறது. நீ அந்த குவளையை காண்கிறாய். அதில் பாதி அளவு நிரம்பி இருக்கும் குளிர்பானம் மட்டும் உன் கண்களுக்கு தெரிந்தால் நீ சந்தோஷமாக இருப்பாய். மாறாக அக்குவளையில் மேல்பாதி அளவில் குளிர் பானம் நிரப்பபடாமல் இருக்கிறதே என்ற வருத்தம் உனக்கு வருமானால் நீ சந்தோஷமாக இருப்பாயா?. எதையும் பாசிடிவ் ஆக பார்க்க பழகு.

இங்கே கீதையில் சாராம்சத்தை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்க்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துகொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னோடயதோ
அது நாளை மற்றவருடயதாகிறது
மற்றொரு நாள் அதுவே வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதி.

--- கீதை


இதை புரிந்துகொண்டால் நாம் எதற்குமே கவலை படவேண்டி இருக்காது.
எனக்கு துன்பம் ஏற்படும் நேரங்களிலெல்லாம் என் மனதில் நான் சொல்லிக்கொள்வது கீதையின் இந்த வரிகளைத்தான்.